இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை அறிமுகம் சென்னை : தமிழகத்தில் 4340 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேகவழிக் கற்றல் (கிளவுட் கம்ப்யூட்டிங்) என்ற புதிய கற்றல் முறை கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக இரண்டு பள்ளிகளில் இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள 4340 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு உத்தரவிட்டது. பள்ளி கல்வி துறை இதை செயல் பாட்டுக்கு கொண்டுவந்தது. இலவச லேப்டாப் திட்டத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,69,229 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை, லேர்னிங் லிங்க்ஸ் பவுன்டேஷன் என்ற சேவை நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு மேகவழிக் கற்றல் (கிளவுட் கம்ப்யூட்டிங்) என்னும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை ஆரம்பிப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேகவழிக் கல்வி முறை என்பது இணைய ஆய்வகம் வாயிலாக மாணவர்களின் அறிவுத்திறனை பள்ளிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு புதுமையான முறையாகும். இதன்படி சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேகவழிக் கல்வி முறையை நேற்று கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இக்கற்றல் முறைக்குத் தேவையான லேப்டாப் மற்றும் பாம்டாப் ஆகியவை வழங்கப்பட்டன. இதேபோல ஸ்ரீபெரும்புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் லேர்னிங் லிங்க்ஸ் பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் டெல் நிறுவனம் இணைந்து ஸீ 50 லட்சம் மதிப்புள்ள 11 லேப்டாப், 13 பாம்டாப், 1 ஊடாட்டுப் பலகை (இன்டர்ஆக்ட்டிவ் போர்டு), 1 புரஜெக்டர், 1 பிரின்டர், இண்டர்நெட் மற்றும் வை,பி தொடர்பு, இக்கற்றல் முறைக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இப்புதிய முறையை மாணவர்களுக்கு கற்பிக்க தேவையான ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் நியமித்துள்ளனர். எக்ஸ்ட்ரா தகவல் தமிழகத்தில் 3000 உயர்நிலைப் பள்ளிகள், 3500 மேனிலைப் பள்ளிகள், 8000 நடுநிலைப் பள்ளிகளில் கணினி வசதி உள்ளன. நடுநிலைப் பள்ளிகளில் தலா 3, உயர்நிலையில் தலா 4, மேனிலைப்பள்ளிகளில் தலா 10 கணினிகள் வீதம் இருக்கின்றன.

No comments:
Post a Comment